ஏற்கனவே உயிர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் கைத்தறி துறையில் எரிகிற வீட்டில் எடுத்தது லாபம் என்ற கணக்கில் அத்துறையில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பகல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். அதன் எடுத்துக் காட்டு தான் ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த இரு நாள் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு.
ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல், உதவி இயக்குனர் ஸ்ரீதரன் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு அரசால் வழங்கப்படும் தள்ளுபடி மானியத்தில் 3 சதவீத தொகையை லஞ்சமாக ஒவ்வொரு சங்கத்திலும் பெற்று வந்தார். இந்த லஞ்ச தொகையை அவருக்கு கீழ் பணிபுரியும், துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் பழனிக்குமார், கைத்தறி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அவரது அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன அலுவலக மேலாளர் ஜோதி என்கிற ஜோதிலிங்கம் ஆகியோர் அசோகபாம் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் கணக்காளராக பணிபுரியும் செந்தில்குமார் மூலம் லஞ்சப் பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்த தகவல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரத்துடன் செல்ல ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் 4 மற்றும் 5 ந்தேதிகளில் அதிரடி ரெய்டு செய்தனர். முதலில் அசோகபுரம் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு நுழைந்தது. இந்த சோதனையில் கணக்காளர் செந்தில்குமார் வசமிருந்து கணக்கில் வராத ரூ. 28,51,480 கைப்பற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு பவானி ரோட்டில் உள்ள ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் அதுவலகம் மற்றும் ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு கணக்கில் வராத தொகை ரூ.3,31,850/- கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ. 31,83,330 இந்த சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர் உட்பட ஐவரிடமும் போலீசார் விசாரணை தொடர்கிறார்கள்.