தமிழக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகளை குறி வைத்து அதிரடி சோதனை நடத்தி வரும் தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத்துறை, தற்போது அரசு அலுவலகங்களையும் குறி வைக்கத் துவங்கியிருக்கிறது! மக்களின் பணம் அதிகம் புழங்கும் அரசு துறைகளில் கணக்கில் காட்டப்படாத பணம் கொட்டிக் கிடக்கிறதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன ! இது குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தை நேர்மையாக நடத்து நினைக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசு அலுவலகங்களில் சோதனை செய்ய அனுமதித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் அம்பத்தூர், அண்ணாநகர், தாம்பரம், திருவான்மியூர், வில்லிவாக்கம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், கோவை. நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர், தி0sருச்சி, அரியலூர், நாகை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தேனி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், மின்சார வாரிய அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள், மாவட்ட தாலுகா அலுவலகங்கள் என மக்களின் போக்குவரத்து அதிகமுள்ள அரசு அலுவலகங்களை குறி வைத்து களமிறங்கினார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.
தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய இந்த அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் 30 லட்ச ரூபாய் பிடிபட்டது. ஒவ்வொரு அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு போலீஸார் கணக்கு கேட்டபோது, அதற்கு முறையாக பதிலளிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள் அரசு அலுவலர்கள். இந்த நிலையில், ‘’ கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால் அது லஞ்ச பணமாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதிருக்கிறது. டாஸ்மாக் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் என்பது, ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வசூலிக்கப்பட்ட பணம்! அரசு அலுவலகங்களில் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டிருப்பதால் அதற்கு காரணமான அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அரசு அலுவலகங்கள் திருந்தும். இல்லையேல், இது ஒரு கண் துடைப்பு ரெய்டாகவே மக்கள் நினைப்பார்கள்‘’என்கிற குரல் பொது மக்களிடமிருந்து எதிரொலிக்கிறது.