பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர். ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
சிவசங்கர் பாபா மீதான புகார்கள் குவிந்த நிலையில், இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. நேற்று (16.06.2021) டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நள்ளிரவே சென்னை அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பின் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் இன்று சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் அதன் காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதும் உறுதியாகியுள்ளது. மாரடைப்பு காரணமாக டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்றதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபா சிக்கியது எப்படி என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வெளியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்க சிவசங்கர் பாபா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சிலர் ஆகியோர் நேரில் ஆஜராக குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகே போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி டேராடூன் விரைந்தபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிவிட்டார்.
சிவசங்கர் பாபா நேபாளம் தப்பிச் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், டெல்லி காசியாபாத்தில் வைத்து அதிரடியாக சிவசங்கர் பாபாவை நேற்று சி.பி.சி.ஐ.டி கைது செய்தது. இதில் 2 வியூகங்களை தனிப்படை கையில் எடுத்தது. முதலில், சிவசங்கர் பாபா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் சிவசங்கர் பாபாவின் பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டேராடூனில் உள்ள பெண் பக்தர் சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்வது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர் சிகிச்சை பெற்ற டேராடூன் மருத்துவமனை பதிவேட்டிலிருந்து அந்தப் பெண்ணின் செல்ஃபோன் எண்ணை தெரிந்துகொண்ட அதிகாரிகள், அந்த எண்ணை தொடர்புகொண்டனர். ஆனால் செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சைபர் க்ரைம் உதவியுடன் அந்த எண்ணை ஆய்வு செய்தபோது, சிவசங்கர் பாபா டெல்லியில் உள்ள ஒருவரிடம் தொடர்ந்து பேசிவந்தது கண்டறியப்பட்டது. அதிலுள்ள டவர் லொகேஷனைக் கண்டறிந்த சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் டெல்லி காசியாபாத்தில் உள்ள பக்தர் ஒருவர் வீட்டில் சிவசங்கர் பாபா பதுங்கியிருந்ததைக் கண்டறிந்து கைது செய்தனர்.