நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் பரப்புரை கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக ஸ்வீட் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கோவையில் நடந்த இந்தியா கூட்டணி பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டார். திமுக சார்பில் தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று கோவை சென்ற ராகுல் காந்தி திடீரென சிங்காநல்லூர் பகுதியில் காரை நிறுத்தச் சொன்னார். உடனே காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி குதித்து, மறுபக்கம் உள்ள பேக்கரி கடைக்குள் நுழைந்தார். அங்கு சென்றவர் உடனடியாக கடையில் இருந்த ஊழியர்களிடம் ஸ்வீட் ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஸ்வீட் யாருக்கு என்ற கேள்வி எழுப்ப? என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்கு எனப் பதில் அளித்துள்ளார் ராகுல் காந்தி.
பின்னர் கடையின் ஊழியர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி அவர்களிடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதேபோல் இனிப்பு வகைகளையும் ருசி பார்த்தார். அதன் பிறகு அங்கிருந்து பயணப்பட ராகுல் காந்தி கடையில் வாங்கிய இனிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அன்பாக கொடுத்தார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என தனக்கு ராகுல் காந்தி இனிப்பு கொடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்!
— M.K.Stalin (@mkstalin) April 13, 2024
Touched and overwhelmed by the 'sweet gesture' from my brother @RahulGandhi.
On June 4th, #INDIA will surely deliver him a sweet victory! https://t.co/0QPhRsLKTQ