காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 21 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
வரும் ஞாயிறன்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதற்காக ராகுல் காந்தி மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இதுவரை ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் முதலமைச்சர் தொடர்பான விவகாரங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். சென்ற வருடம் கூட ராஜீவ்காந்தியின் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார். இதன் பின் இந்த ஆண்டு ராகுல் மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதேபோல் வரும் ஞாயிறன்று ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல் வர இருக்கிறார். முன்னதாக சனிக்கிழமை கர்நாடகத்தில் நடைபெறும் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வராக பதவியேற்க இருக்கும் சித்தராமையா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது. அப்படி கலந்துகொள்ளும் பட்சத்தில் அங்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் போன்றோரையும் ராகுல் சந்திக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.