உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி வாகையைச் சூடியது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகையும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். அதில், "சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணானவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!! தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும். வருங்கால பிரதமராகவும் வரவேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு தொண்டனின் கனவு" எனத் தெரிவித்துள்ளார்.