Skip to main content

"அந்த துணிச்சல் தலைவர் ராகுல்காந்திக்கு உண்டு"- ஜோதிமணி எம்.பி.!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

"Rahul Gandhi has that brave leader" - JOTHI Mani MP!

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (10/03/2022) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 

 

இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3- லிருந்து 2 ஆக குறைந்தது. நாட்டில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் காங்கிரஸ் உள்ளது. 

 

தேர்தல் முடிவுகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்; வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக எனது நன்றி. தேர்தல் முடிவுகளில் பாடம் கற்றுக்கொள்வதுடன் இந்திய மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வலிமையான தலைவர்கள் எப்போதும் தோல்விகளால் துவண்டு போவதில்லை.  மாறாக களத்தில் நின்று,போராடி, வரலாற்றை மாற்றி எழுதுவார்கள். இது அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுத் தருணத்தின் துவக்கமாகவும் இருக்கலாம். அந்த துணிச்சல் தலைவர் ராகுல்காந்திக்கு உண்டு. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. தொடர்ந்து உறுதியோடு செயல்படுவோம். வெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்