
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கலைவாணி. தன் மூத்த மகன் ராகுல் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனவுடன், கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ‘ஆண்தானே? எங்கேயாவது சென்றிருப்பான். அவனாகவே திரும்பி வந்துவிடுவான்.’ என்று அவரது புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மெத்தனம் காட்டியது கொரட்டூர் காவல் நிலையம். தாய்ப்பாசத்தால் தவித்துப்போனார் கலைவாணி. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, தன் மகனைக் கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஸ்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து, ராகுலைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன் பிரகாரம், காவல்துறையினரும் ராகுலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மகனைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய தாய் கலைவாணியோ, அதிர்ச்சியில் உறைந்து போனார். ராகுலாக வீட்டை விட்டுச் சென்ற மகன், சுபத்ரா என்ற திருநங்கையாக மாறியிருந்ததைக் கண்டு கண்ணீர்விட்டார்.
திருநங்கை சுபத்ராவிடம் நீதியரசர்கள் சி.டி.செல்வம் மற்றும் சதீஸ்குமார், “பிச்சை எடுக்கக் கூடாது. நன்றாகப் படிக்க வேண்டும். தவறான வழியில் செல்லக் கூடாது. தாயை அடிக்கடி சந்தித்து உதவ வேண்டும்.” என்று அறிவுரை கூறி, வழக்கை முடித்து வைத்தார்கள்.
ஆணும் பெண்ணும் இணைந்த நிலையில் உள்ள சிவனை, அர்த்தநாரி என்று வழிபட்டு வருவதன்மூலம், முன்னோர்கள் காட்டிய வழியில், ஆன்மிக கலாச்சாரத்தை கடைப்பிடித்து வருகிறோம். மனதளவில் ஒரு பாலினமாகவும், உடலளவில் இன்னொரு பாலினமாகவும் அனுபவித்து வரும் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான், ராகுல் போன்றவர்கள் திருநங்கைகளாக மாறுகின்றனர். சகோதரத்துவத்துடன் அவர்களை ஏற்றுக்கொள்வோம்!