வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நன்நேரி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 6 மாதங்களாக ஊராட்சி சார்பில் சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் பெண்கள் சுமார் 3 கிலோமீடர் தூரம் வரை சென்று குடங்களில் குடிநீரை சுமந்து வரவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் தண்ணீர் எடுக்க செல்ல முற்பட்டால் சாலை பள்ளம், குண்டும் குழியுமாக இருப்பதாலும், விளக்குகள் எரியாததாலும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கிராம மக்கள் வெள்ளக்குட்டை பேருந்து நிறுத்தத்தில் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆலங்காயம் போலீசார் மற்றும் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். அப்போது கிராம மக்கள் அதிகாரிகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம், தேர்தலுக்கு முன் குடிநீர் பிரச்சனை, அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 மணி நேரம் நடந்த சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.