சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது தொடர்பான விமர்சனங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னை எழிலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்தார். அவர் கூறியதாவது,
சுஜித் மீட்புப்பணியில் நடைபெற்ற சாதக பாதகங்கள் அனைத்தும் ஆராயப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த சடலத்தை காட்சிப்படுத்துவது மீட்பு பணி விதிமுறைகளுக்கு எதிரானது. பேரிடர், விபத்து போன்றவற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் சில விதிமுறைகளை விதித்துள்ளது. அந்த விதிகளின் படியே பின்பற்றபட்டது
கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை காட்சிப்படுத்தியதால் உலக அளவில் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அந்த விவகாரத்திற்கு பின் விபத்து, பேரிடரில் மீட்கப்பட்டவர்களின் சடலத்தை எப்படி காட்சிப்படுத்துவது என்பது தொடர்பான ஒரு விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அந்த விதிகளின்படி சுஜித்தின் உடலை காட்சிப்படுத்துவது விதிமுறைகளுக்கு எதிரானது. மீட்பு பணி என்பது வேறு உயிரிழந்த சடலத்தை மீட்பது என்பது வேறு. இறந்த உடலை எப்படி மீட்பது என்ற அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே சுஜித் உடல் மீட்கப்பட்டது.
களத்தில் பணியாற்றியவர்களின் திறனை சந்தேகிப்பது சரியான எண்ணம் இல்லை. மீட்புப்பணியில் 600 பேர் ஈடுபட்டனர். துரதிஷ்டவசமாக சுஜித்தை உயிருடன் மீட்கப்பட முடியவில்லை என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது என்றார்.