சென்னை ராஜ்பவனில் நேற்று , குடிமைப்பணி தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் "எண்ணித் துணிக" என்ற தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது அவர் மாணவர்களிடம் பேசும் போது, " நான் முதுநிலை படிப்பை முடிக்கும் வரையில் என் விடுதி அறையில் மின்விசிறி வசதி கூட கிடையாது. தினமும் செய்தித்தாள், புத்தகம் மட்டுமே படிக்க முடிந்ததால் எனக்கு கவன சிதறல் ஏற்பட்டதில்லை. வான் இயற்பியல் நிபுணர் ஆவது என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் வாழ்க்கை என் பாதையை மாற்றி விட்டது. குடிமை பணியாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் தவறாக கூட முடிவுகளை எடுக்க நேரிடும். சில தவறான முடிவுகளை நானும் எடுத்து உள்ளேன். ஆனால் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்து விடக்கூடாது. சரியான நேரத்தில் முடிவு எடுக்காவிட்டால் தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள்.
இரண்டு வரிகளில் ஆழமான பல கருத்துக்களை உள்ளடக்கியது திருக்குறள். இது மிகப்பெரிய சொத்து. அதை படித்து நான் உத்வேகம் அடைந்தேன். தமிழ் மொழி மிக அற்புதமான படைப்புக்களை கொண்டுள்ளது. திருக்குறளின் மொழிபெயர்ப்பு அதன் ஆழமான கருத்துகளை எடுத்துரைக்கவில்லை. நுண்ணறிவை அதிகரிக்கும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நம் பொருளாதாரத்தை சீர் குலைக்க நினைத்தால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கையில் எடுக்கும்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒற்றை இலக்கை நோக்கி திடமான மன உறுதியுடன் பயணிக்க வேண்டும். தினமும் 13 முதல் 14 மணி நேரம் படிப்பதற்க்காக ஒதுக்க வேண்டும். கவனத்தை திசை திருப்பும், மொபைல் போன், டிவி போன்றவைக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. திட்டமிட்டதை அந்த நேரத்தில் செய்யுங்கள்.பொழுதை தட்டிக் கழிக்காதீர்கள். உங்கள் மனஉறுதி உங்களிடம் தான் உள்ளது" என்று பேசினார்.