தன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் வீட்டு விழாவிலேயே எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். இதனை அறிந்த பொதுமக்கள் சாமானியர்கள் மீது மட்டும் தான் சட்டம் பாயுமா? அதிகாரம் மிக்கவர்கள் மீது பாயாதா? சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.
அவதூறு வழக்கில் போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூவிடமும் எஸ்.வி.சேகர் பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமார்-திவ்யா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரும் பங்கேற்றார். தன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் வீட்டு விழாவிலேயே எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார்.
ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், சென்னை உயர்நீதிமன்றத்தாலும், டெல்லி உச்சநீதிமன்றத்தாலும் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையிலும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எஸ்.வி.சேகர் தலைமறைவாகாமல் சென்னையிலேயே ஹாயாக சுற்றி வருகிறார். போலீஸ் பாதுகாப்புடனேயே சுற்றித் திரிவதும், முக்கியஸ்தர்களின் வீட்டு விழாக்களில் சர்வ சாதாரணமாக வந்து செல்வதுடன் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதும் பொதுமக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சாமானியர்கள் மீது மட்டும் தான் சட்டம் கடுமையாக பாயுமா? அதிகாரம் மிக்கவர்கள் மீது பாயாதா? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை இழிவாக பேசிய பெண்ணை உடனடியாக கைது செய்த போலீசாரால் எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாது ஏன்? சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்த போலீசார் எஸ்.வி.சேகரை மட்டும் விட்டு வைத்திருப்பது ஏன்? என்று மூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.