Skip to main content

குயின் இணையதள தொடர் தடை கோரிய மனு தள்ளுபடி!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Queen-web-series-high-court

 



தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக  நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த மாதம் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததைப் போல குயின் இணையதள தொடருக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மனுதாரரின் மனுவைப் பொறுத்தவரை, படத்தைப் பார்த்து, அது கற்பனைக் கதையா? என்பன உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்துதான் முடிவெடுக்க முடியும் எனவும், அதற்கு நான்கு வார கால அவகாசம் ஆகும் எனவும்,  மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

 Queen-web-series-high-court

 



மோடி வாழ்க்கை வரலாற்று படத்தைப் பொறுத்தவரை, அவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இந்த வழக்கில் அப்படி அல்ல எனவும், 2017-ஆம் ஆண்டு வெளியான நாவலின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உண்மைச் சம்பவங்களைத் தழுவிய  கற்பனை கதை எனவும் இணையதள தொடரின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள்,  தற்போது ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்பு குறைந்து விட்டதாகவும், டி.ஆர்.பி. போட்டியில் உள்ளதாகவும் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொள்பவர் வீடியோ வெளியிடுவதாகவும், பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குற்றவாளியின் பெயர் மற்றி, புகைப்படம் வெளியிடுவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், வர்த்தகக் நோக்கில் ஊடகங்கள் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து,  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த மாதம் 16-ஆம்  தேதி  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில்,  இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து குயின் இணையதள தொடருக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

சார்ந்த செய்திகள்