Skip to main content

“பொதுப்பாடத் திட்டத்தால் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

The quality of higher education is called into question by the curriculum Edappadi Palaniswami

 

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 21 ஆம் தேதி மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாகத் துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொதுப் பாடத்திட்டம் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் அமல்படுத்தப்படும். கூடுதலாகக் கொண்டுவரப்படும் புதிய படிப்புகளில் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு 2024 - 2025 ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் அரசு, அரசு உதவி பெறும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் இந்தப் பொதுப் பாடத்திடங்கள் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படும். மாநிலக் கல்விக்கொள்கை குழு தயாராகி வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுகவின் 31 ஆண்டுகால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. குறிப்பாக 2011 இல் திமுக ஆட்சியில் உயர்கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர் சேர்க்கை, அதனைத் தொடர்ந்து 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 51 சதவீதமாக வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே உயர்கல்வித் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்தது. கடந்த இரண்டு ஆண்டு காலம் தி.மு.க ஆட்சியாளர்கள் நடத்தும் அரசில், உயர்கல்வித் துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். துறையின் அமைச்சர் பொன்முடி தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து, தமிழ்நாட்டின் இளைஞர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர்கல்வித் துறையின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதால்,  தமிழகத்தில் உயர்கல்வித் துறை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

 

நடப்புக் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக அரசின் இந்த முடிவுக்குப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவசர கதியில் உருவாக்கப்பட்டு, அவசர கதியில் திணிக்கப்படும் பொதுப்பாடத் திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்பாடத் திட்டத்தால் தமிழக உயர் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். எனவே கல்வித் துறையில் ஏதேனும் மாறுதல்களைக் கொண்டுவரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்