Skip to main content

மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் அனிதாவுக்கு அஞ்சலி

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் அனிதாவுக்கு அஞ்சலி
 


நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மறைவுக்கு சென்னை அடுத்துள்ள மேடவாக்கம் காயிதேமில்லத் ஆடவர் கல்லூரியில் புதனன்று (06.09.2017) காலை 11 மணியளவில் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இதில் பங்கேற்றார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ரபி துவக்கவுரையாற்றினார்.

கல்வியாளர் பிரின்ஸ் பேசுகையில் “உலகில் பல நாடுகளில் அரசின் கடமையாக கல்வி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பணக்கார குழந்தைகளுக்கு கிடைக்கிற கல்வி கூட சமமாக இல்லை. ஏழைகளுக்கு கிடைக்கிற கல்வியில் இருக்கிற ஏற்றதாழ்வுகள் சொல்லிமுடியாது. அனைவருக்கும் சமமான, தரமான கல்வி தராமல் அனைவருக்கும் பொதுவான தேர்வு முறையை எப்படி கொண்டுவரமுடியும்” என்று கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு முறை இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது. அதற்கு எதிரான போராட்டமாகவே அனிதாவின் மரணம் நிகழ்ந்துள்ளது. நீட் தேர்வுமுறையை முழுமையாக ரத்து செய்வதே அனிதாவுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி! என்றார்.

கண்ணியமிகு காயிதேமில்லத் முஹம்மது அவர்களின் பேரனும் கல்லூரியின் தாளாளருமான தாவூத் மியாகான் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் மாணவர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் கல்லூரி நிர்வாகம் மதிப்பளித்துவந்துள்ளது. இன்றைய நீட் தேர்வை நாம் அனுமதித்துவிட்டால் மற்ற படிப்புகளுக்கும் இத்தகைய தேர்வுகள் வந்துவிடும். தமிழகத்தின் சமூக நீதி போராட்டத்துக்கு மாணவி அனிதா தனது உயிரை தியாகம் செய்துள்ளார். அவரைப் போல மற்ற மாணவர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது நமது கடமை” என்றார்.    

நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படவேண்டும் என்று காயிதே மில்லத் கல்லூரியின் மாணவர்களும் ஊழியர்களும் நிர்வாகமும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மாணவி நித்யா முன்மொழிய அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அனிதாவின் நினைவைப் போற்றும்வகையில் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர். 

சார்ந்த செய்திகள்