Skip to main content

பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வரவேற்ற இளைஞர்கள்..!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விழாக்கள், குடும்ப விழாக்கள் என்று எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அந்த விழாவின் தொடக்கத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்குவதும், விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதையும் சேந்தன்குடி மரம் தங்கசாமி வழக்கமாக கொண்டிருந்தார். அதன் பிறகு அதே முறையை இளைஞர்கள் பலரும் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் புயலில் மரங்கள் அழிந்துவிட்டதால் அழிந்த மரங்களை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக கிராமங்கள் தோறும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

puthukottai youth welcomes school students by presenting saplings to them

 

 

இந்த நிலையில் தான் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கீரமங்கலம் கொடிக்கரம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இளைஞர் பெருமன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர். மேலும் படிப்பு உபகரணங்களும் வழங்கினார்கள்.

அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக பல மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் சேர்த்தனர். அப்போது புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டவுடன் புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் புத்தகத்துடன் மரக்கறுகளும் வழங்கப்பட்டது. 

 

puthukottai youth welcomes school students by presenting saplings to them

 

இது குறித்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்ற இளைஞர்கள் கூறும் போது.. இன்றைய நிலையில் மரங்களில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதானால் தான் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம். அதே போல பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மரம் வளர்ப்பு என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதால் பள்ளி திறப்பின் முதல் நாளில் அவர்களை வரவேற்று மரக்கன்றுகளை வழங்கி உள்ளோம். அதே போல புதிய மாணவர்களுக்கும் வழங்கி இருக்கிறோம். இந்த கன்றுகளை இந்த மாணவர்கள் நிச்சயம் வளர்த்துவிடுவார்கள். பின்னாளில் இந்த மரங்களே இவர்களின் உயர்படிப்புக்கு உதவும் என்றனர். 

இதே போல திருவாரூர் மாவட்டத்தில் கிரீன் நீடா என்ற அமைப்பின் சார்பில் பல பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டும், பல பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் பள்ளி திறப்பு நாளை கொண்டாடினார்கள். கிரீன் நீடா அமைப்பால் பல லட்சம் மரக்கன்றகள் இதுவரை நடப்பட்டுள்ளது. அத்தனை கன்றுகளும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டும் வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் திருவாரூர் மாவட்டம் முழுமையான பசுமை மாவட்டமாக மாற்றிக் காட்டுவோம். அதற்கு இளைஞர்களும், மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே போல வணிகர்களும், கிராமத்தினரும் வரவேற்பு கொடுப்பதுடன் நாங்கள் நடும் மரங்களை பாதுகாத்து வளர்க்கிறார்கள். வனத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை இப்படி அத்தனை துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கி மரக்கன்றுகள் வைக்க அனுமதி வழங்கி வருகிறார்கள் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்