தமிழகம் தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் குடிதண்ணீர் மட்டுமின்றி கழிவறைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் கழிவறைகளை பூட்டிவைக்கும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

ஆறுகளில் அடுக்கடுக்காய் கிடந்த மணலை திருடக் கொடுத்த அரசாங்கம் நீர்நிலைகளை சீரமைத்து தண்ணீரை சேமிக்காமல் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி மழை பெய்ய கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதற்காகவும் அரசு பணம் செலவாகிறது.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் மேலும், பல வருடங்களாக போதிய மழையின்றி, மக்களின் குடிநீர் ஆதாரமும், விவசாயமும் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில், ஆலங்குடி ஜமாத்தார்கள் ஒரு மணி நேரம் தங்கள் கடைகளை அடைத்து, பெரிய பள்ளிவாசலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்புலி ஆறு கரையில் அஜ்ரத் ரகுமத்துல்லா தலைமையில் மழைவேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறை நம்பிக்கையோடு எம் மக்கள் வாழ நல்ல தண்ணீர் வேண்டும் விவசாயம் செழிக்க வேண்டும் பூமித்தாய் நனைந்து குளிர்ச்சியடைய வேண்டும். தண்ணீருக்காக உயிர்பலகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுதல். அனைத்து சகோதரர்களும் நலமாக வாழ வழிகிடைக்கும் என்று நம்புவோம் என்றனர்.