சிவகங்கை மாவட்டம், புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நாசர். இவர், திருச்சி காட்டூரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இவர், தாய்லாந்து நாட்டில் கப்பலில் வேலை செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளார். மேலும், விருப்பமுள்ளவர்கள் தங்களை நேரில் அணுக வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சிறுமித்தூர் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் (50), தன்னுடைய நண்பர் எழில் குமரன் என்பவரோடு சேர்ந்து அந்நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவ பரிசோதனைக்காக முதல் கட்டமாக ரூ.565 செலுத்த வேண்டும் என்று முகமது நாசர் கூறியுள்ளார். அதன் பிறகு மருத்துவ பரிசோதனை முடிந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியதை எடுத்து ரங்கராஜன் வங்கி கணக்கு மூலம் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
அதன்பிற்கு வெகுநாட்கள் கழிந்தும் வேலை தொடர்பாக முகமது நாசர் எதுவும் தெரிவிக்காததால், மீண்டும் கடந்த 26ஆம் தேதி நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது, முகமது நாசர், இவரை ஏமாற்றியது தெரியவந்தது. இதை அடுத்து திருவரம்பூர் காவல் நிலையத்தில் ரங்கராஜ் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், நிறுவன உரிமையாளர் முகமது நாசர் மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் ஜோஸ் குட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.