கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகமாக சுட்டெரிப்பதால் கிராமங்கள், நகரங்கள் என்று பொதுமக்கள் செல்லும் வழிகள், கூடும் இடங்களில் தன்னார்வலர்கள் தண்ணீர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர். அப்படி தாகம் தீர்க்க தண்ணீரும் குடிக்க குவளையும் வைத்திருந்தால் அதையும் திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். யாரோ திருடியிருந்தால் பரவாயில்லை. குவளையை திருடிச் செல்வது காவல் பணி செய்யும் போலிசாரே என்றால்...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல் அருகில் இளைஞர்களால் தண்ணீர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம். அதே போல தான் இந்த ஆண்டும் திறந்தார்கள். அந்த தண்ணீர் பந்தலில் வைக்கப்படும் சில்வர் குவளைகள் அடிக்கடி காணாமல் போனது. இதுவரை சுமார் 15 க்கும் மேற்பட்ட குவளைகள் காணவில்லை.
தொடர்ந்து தண்ணீர் பந்தலில் உள்ள குவளைகள் திருடப்படுவதை கண்டுபிடிக்க அப்பகுதி இளைஞர்கள் ரகசியமாக திட்டம் வகுத்தனர். அதன்படி பள்ளிவாசல் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை வழக்கம் போல தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த சில்வர் குவளையை காணவில்லை. அதனால் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை இளைஞர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் இரவு 11.23 மணிக்கு ரோந்துப் பணிக்கு செல்லும் இரு போலிசார் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து தண்ணீர் பந்தல் அருகே நிறுத்துகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த போலிஸ்காரர் இறங்கி தண்ணீர் பந்தலில் இருந்த குவளையை எடுத்துக் கொண்டு வந்து மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொள்ள மீண்டும் மோட்டார் சைக்கிள் நகர்ந்து செல்கிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சி வெளியானது முதல் மேற்பனைக்காடு பகுதியில் பரபரப்பாக உள்ளது. பாதுகாப்புக்கு வரும் போலிசாரே குவளைகளை எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.