தமிழகம் முழுவதும் பிரதம மந்திரி வேளாண் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தொகையை 4 மாதத்துக்கு ஒருமுறை 2 ஆயிரம் எனப் பிரித்து வழங்கிவருகிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தில் விவசாயியாக இல்லாதவர்களை இணைத்து அவர்களுக்கும் நிதி தரப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திவருகிறது.
இந்தத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவேண்டுமென பா.ஜ.க நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களைச் சந்தித்து மனு அளித்தனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியைச் சந்தித்து மனு கொடுக்க பாஜகவினர் செப்டம்பர் 7ம் தேதி சென்றுள்ளனர். முதல்வர் வருகை நிகழ்ச்சி ஏற்பாட்டில் உள்ளதால் புகார் பெட்டியில் மனுவைப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.கவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்கவரவில்லை.
புகார் மனுவை நேரில் வாங்க கலெக்டர் மறுக்கிறார் எனத் தலைமைக்குத் தகவல் கூறியுள்ளனர். தலைமையின் உத்தரவுப்படி செப்டம்பர் 8ம் தேதி காலை 50க்கும் அதிகமான பா.ஜ.க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளனர். வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் நின்றது.
சாலை மறியலில் அமர்ந்த பா.ஜ.கவினர், ‘மனுவை வாங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம், நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு’ என கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமாதானம் பேசி மறியலைக் கைவிடச் செய்தனர். பின்னர் அவர்கள் தந்த மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுப்பிவைத்தனர்.