நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்தியா கூட்டணி சார்பில் அக்கூட்டணியில் உள்ள திமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடும் நிலையில் திசையன்விளை நகரப் பகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவிப்பதில் திமுகவின் ஒன்றிய செயலாளர் ஜெகதீசனுக்கும், நகரச் செயலாளர் ஜான் கென்னடிக்கும் இடையே மேற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி பூசலாக மாறியது.
இதில் இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தங்களுக்கு கூட்டணியில் மரியாதை இல்லை எனக் கூறி ஆதரவுகளுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால் இந்த பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பரபரப்பானது.