Skip to main content

'புரெவி' புயல் மழையின் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

'Purevi' storm rains kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சுபாஷ் (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மழையின் காரணமாக, கடந்த சில நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்த அவர், நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள அவர்களது வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மின்சார மோட்டாரில் தண்ணீர் வருகிறதா என்று பார்ப்பதற்காக அதன் சுவிட்சைப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அடுத்து கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகில் உள்ளது புல்லூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயது வெங்கடேசன். இவர் விவசாயக் கூலி வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை, விவசாயக் கூலி வேலைக்குச் செல்வதற்காக அவ்வூர் ஏரிக்கரை வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் சேறும் சகதியுமாக இருந்ததால், நடந்து செல்லும்போது கால் வழுக்கி, ஏரி, மதகுப் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வெங்கடேசனை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். வெங்கடேசனுக்கு தமிழச்சி என்ற மனைவியும், பதினோரு வயதில் புஷ்பா என்ற மகளும், ஒன்பது வயதில் மகேந்திரன் என்ற மகனும் உள்ளனர். 

 

இந்தச் சம்பவம் குறித்து வெங்கடேசன் மனைவி தனலட்சுமி வேப்பூர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது மதகளிர் மாணிக்கம். இந்த ஊரைச் சேர்ந்தவர் செந்தில் வேல்முருகன். இவரது மனைவி, விஜயலட்சுமி இவர்களுக்கு ஆதித்தியன் என்கிற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர். மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு, செந்தில் வேல்முருகன் பிழைப்புக்காக வெளிநாடு சென்று, வேலைசெய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று விஜயலட்சுமி வீட்டில் இருந்தபோது, மழையின் காரணமாக ஊறிப்போய் இருந்த அவர்களது வீட்டின் சுவர் விஜயலட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்