கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்ல தண்ணீர் குளம் மற்றும் பொதுக் களத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் அகற்றவில்லை.
மேலும், கழிவு நீர் சாக்கடையை தடுத்து குளத்திற்கு செல்லாமல் திருப்பிவிட வேண்டும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கிராம சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போரட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தி வரும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் அதிகாரிகளை பொம்மையாக சித்தரித்து, நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றிய அலுவலகம் நோக்கி கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நிர்வாக அதிகாரிகளின் உருவ பொம்மைக்கு எருக்கன் பூ மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.