கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.
அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.