Skip to main content

குளத்தை மீட்க துண்டறிக்கை வெளியிட்டு சிறைசென்ற எழுத்தாளருக்கு அச்சுறுத்தல்... காவல் நிலையத்தில் புகார்

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவுகளை அடுத்தடுத்து போட்டாலும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அசைந்து கொடுப்பதில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் சொந்தச் செலவில் நீர்நிலைகளை தூர்வாரினாலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் பட்ட கஷ்டத்திற்கு பலன்கிடைக்காமல் கவலையில் உள்ளனர். இதேபோலதான் பல மாவட்டங்களிலும் நடக்கிறது.

 

pudukottai

 

அதேபோலதான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா குளந்திரான்பட்டு கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவுள்ள வெட்டுக்குளத்தை காணாமல் அந்த குளத்தை மீட்டுத் தரக்கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் துரைகுணா கடந்த 2017 முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தார். பலனில்லை வழக்கு தொடுத்தார் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில்தான் 15 நாட்களுக்கு முன்பு குளத்தை மீட்க ஆட்கள் தேவை என மாவட்ட ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை தேவை என துண்டறிக்கை வெளியிட்டார்.

இந்த துண்டறிக்கை அதிகாரிகள் மட்டத்தில் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் சம்மந்தப்பட்ட இடத்தில் காணாமல் போன குளத்தை கண்டறிய அதிகாரிகள் களமிறங்கி அளவீடு செய்தனர். அத்தனையும் இன்னும் 15 நாளில் அறுவடைக்கு தயாரான நெல் கதிர்.  போன அதிகாரிகள் கதிரை அறுக்க 2 மாதம் அவகாசம் கொடுத்துவிட்டு வந்தார்கள். வந்த கையோடு துண்டறிக்கை வெளியிட்ட துரை குணா மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

 

pudukottai

 

வளைந்து கிடந்த பயிரை அழிக்க யார் உத்தரவிட்டதோ.. அடுத்த நாள் காலை 7 மணிக்கெல்லாம் பொக்கலின் இயந்திரங்களுடன் போலீஸ் பாதுகாப்போடு சென்ற அதிகாரிகள் நெல் கதிரை அழித்தனர். இடத்தை நாங்க ஆக்கிரமிப்பு செய்யல பழைய மணியக்கார் ஆக்கிரமித்து அனுபவித்தார் அதன் பிறகு எங்களிடம் பணத்தை வாங்கிட்டு கொடுத்தார் கதிர் அறுக்கும் வரை காத்திருங்கள் பிறகு குளம் வெட்டலாம் என்று வாகனங்களுக்கு முன்னால் விழுந்து கதறினார்கள் சோறு கொடுக்கும் நெல் பயிர் இரவு வரை அழிக்கப்பட்டது. ஆனால் குளம் வெட்டவில்லை.

இந்தநிலையில்தான் செப்டம்பர் 15 ந் தேதி துண்டறிக்கை வெளியிட்டதற்காக சிறைப்படுத்தப்பட்டு நிபந்தனை பிணையில் வந்துள்ள துரைகுணா கறம்பக்குடி காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்துள்ளார்.
 

அந்த புகாரில் குளந்திரானபட்டு கிராமத்தில் குளத்தை மீட்க துண்டறிக்கை வெளியிட்டதால் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நான் தான் காரணம் என்று அதே ஊரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கரிகாலன், கருப்பையா ஆகிய இருவராலும் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. குளித்தலை சம்பவம் போல நடக்க வாய்ப்புள்ளதால் எனக்கும் என் குடும்பத்துக்கும்  பாதுகாப்பு வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். புகார் கொடுத்த சம்பவத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்