புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 81 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 13 மாணவிகள் மாநில அளவிலான குடியரசு தின வாலிபால் போட்டிக்காக இடைநிலை ஆசிரியர் சபா சகேயூன், பட்டதாரி ஆசிரியை திலகவதி ஆகியோர் பாதுகாப்பில் திருச்சி மாவட்டம் தோளூர்பட்டி கிராமத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் உள்ள விளையாட்டுத் திடலில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர்.
இன்று காலை நடந்த மாநில அளவிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டியில் பிலிப்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று ஊருக்கு திரும்பிய போது கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டு அருகே உள்ள கோயிலில் தரிசனம் செய்த பிறகு காவிரி ஆற்றில் விளையாட்டு உடைகளுடன் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஒரு மாணவியை தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. அந்த மாணவியை காப்பாற்ற முயன்ற மற்ற மாணவிகளையும் தண்ணீர் அடித்துச் சென்றுள்ளது. இதில் பிலிப்பட்டி வெள்ளைச்சாமி மகள் சோபியா (7ம் வகுப்பு), ராஜ்குமார் மகள் தமிழரசி (8ம் வகுப்பு), மோகன் மகள் இனியா (6ம் வகுப்பு) பெரியண்ணன் மகள் லாவண்யா (6ம் வகுப்பு) ஆகிய 4 மாணவிகளும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
கரையில் நின்ற மற்றவர்கள் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியாத நிலையில், தீயணைப்பு வீரர்கள் வந்து 4 மாணவிகளையும் சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஒரே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் 4 குழந்தைகளும் ஒரே நேரத்தில் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்ட தகவல் அறிந்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோர்களை அந்த நிறுவன வேனில் அழைத்து வந்தனர். பள்ளியில் திரண்ட பெற்றோர்களும் உறவினர்களும் கிராம மக்களும் கதறி அழுதனர். பலர் மயக்கமடைந்துள்ளனர். பள்ளிக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பெற்றோர்களையும் உறவினர்களையும் தேற்றி வருகின்றனர்.
"எங்கள் குழந்தைகள் விளையாட்டில் வெற்றி பெற்று வந்து வெற்றி விழா கொண்டாடனும் என்று சொல்லிட்டு போனாங்களே இப்ப வெற்றி மாலைக்கு பதிலா வேற மாலை போடுற மாதிரி ஆகிடுச்சே" என்று கிராமமே சோகத்தில் கதறி துடிக்கின்றது. ஒரே பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் 4 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் ஊரே கதறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை பொட்டு மணி மற்றும் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இரு ஆசிரியர்கள் என மூன்று பேரையும் கல்வித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.