Skip to main content

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது; இலங்கை கடற்படை அதிரடி நடவடிக்கை!

Published on 04/09/2024 | Edited on 04/09/2024
Pudukottai Dt 4 fishermen arrested by Sri Lanka Navy

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மற்றும் கோட்டை மண்டலம் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் வழக்கம் போல் இன்று (04.09.2024) காலை மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

மேலும் 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து 4 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் முடிந்து நேற்று (03.09.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி இலங்கை ரூபாயில் அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 42 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த அபராதத்தைக் கட்ட தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், மேலும் 10 மீனவர்களுக்குச் செப்டம்பர் 10ஆம் தேதி  வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்