புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர், செரியலூா், வலத்தக்காடு, துவரடிமனை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள மண்பாண்ட கலைஞர்கள் ஊருக்காக மண் தொட்டிகள், குதிர்கள், அய்யனார் கோயில்களுக்கு களிமண் குதிரைகள், நாய், காளை, சுவாமி சிலைகள் செய்த காலம் மாறி உலகுக்கே களிமண் பொம்மைகள், சிலைகள் செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் பிற நாடுகளுக்கே சென்று களிமண் சிலைகள், பொம்மைகள் செய்து சாதித்துள்ளனர். இந்தியாவில் அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட பல நகரங்களிலும் இவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட களிமண் பொம்மைகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
இப்படி பல்வேறு இடங்களில் இவர்களின் கைவண்ணத்தைப் பார்க்கும் மண் சிற்பங்கள், சிலைகள், பொம்மைகள் மீது ஆர்வமும், ஆசையும் கொண்டவர்கள் தங்கள் வீடுகளில் அழகிற்காக வைத்துக் கொள்ள களிமண் சிலைகளை செய்ய சொல்லி வாங்கிச் செல்கின்றனர்.
இப்படித்தான் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அறந்தாங்கி அருகில் உள்ள மரமந்தூர் வலத்தக்காடு கிராமத்தை சேர்ந்த, பல நாடுகளுக்கும் சென்று கலைப் பொருட்கள் செய்து சாதித்த டெரகோட்ட தங்கையாவின் கை வண்ணத்தைப் பார்த்து தனது வீட்டில், தோட்டத்தில் வைக்க உயரமான குதிரை சிலைகள் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த பெண்மணிக்காக தங்கையா களிமண்சிலை செய்யும் பல கலைஞர்களை அழைத்து வந்து இரவு பகலாக 9 அடி உயரத்தில் 10 க்கும் மேற்பட்ட களிமண் குதிரை சிலைகளை செய்து சூலையில் வைத்து வேகவைத்து பெங்களூருக்கு லாரியில் ஏற்றி அனுப்ப இருந்த நேரத்தில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக அந்த களிமண் குதிரைகள் தேங்கியுள்ளது.
சிறிய வீட்டில் வைக்கவும் வசதி இன்றி, வீட்டு வாசலில் வைத்து அதற்கு பந்தல் அமைக்கக்கூட வழியின்றி மழையிலும் வெயிலிலும் நனைந்து வருகிறது. மேலும் குதிரை சிலைகள் செய்ய வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்ட கலைஞர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குகூட சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் தங்கையா.
இது குறித்து தங்கையா கூறும் போது.. நான் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு சிலைகள் செய்து கொடுத்திருக்கிறேன். என்னைப் போலவே மற்றும் பலர் பல நாடுகளுக்கும் சென்றுள்ளனர். எங்கள் வேலைகளைப் பார்த்து ஆர்டர்கள் கொடுக்கிறார்கள். ஆனால் ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பதில்லை. அதனால் தற்போதைய இளைஞர்கள் இந்த தொழிலைவிட்டு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய களிமண் சிலைகள் வலுவாகவும், அழகாகவும் இருக்கும் அதனால்தான் எங்களை அழைக்கிறார்கள். பல பொருட்காட்சிகளில் எங்கள் சிற்பங்கள் இடம் பெறும். தற்போது பெங்களூருக்கு குதிரை சிலைகள் கேட்டார்கள். அவசரமாக பலரையும் சம்பளத்திற்கு அழைத்து வந்த சிலைகளை செய்து முடித்தபோது கரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அதனால் அப்படியே முடங்கியுள்ளது. பந்தல் அமைக்க கூட வசதி இல்லை. அதனால் இப்படி வெளியில் வைத்திருக்கிறோம். சிறப்பு அனுமதி கிடைத்தால் உடனே சிலைகளை அனுப்பி வைக்கலாம். அல்லது ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகே அனுப்ப வேண்டும் என்றார்.
மேலும் பல கலைஞர்கள் கூறும் போது.. இந்த நேரத்தில் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சின்ன, சின்ன வேலைகள் செய்தாலும் அதை ஊருக்குள் கொண்டு போய் விற்க முடியவில்லை. அதனால் ஒவ்வொரு மண்பாண்ட தொழிலாளர்களின் குடும்பமும் வறுமையில் வாடுகிறது. அரசு நிவாரணமும் ஒரு சிலருக்கே கிடைத்திருக்கிறது, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஒவ்வொரு மண்பாண்ட கலைஞர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க உதவி செய்ய வேண்டும். எங்களைப் போன்ற நலிவுற்ற கலைஞர்களுக்கு போதிய நவீன கருவிகள் விலையில்லாமல் வழங்குவதுடன் களி மண் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றனர். மேலும் களிமண் சிலைகள் செய்வதை கல்லூரிகளில் பாடமாக வைத்து அனுபவமுள்ள கலைஞர்களை பயிற்சி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.