உலகத்தையே கரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் சி.ஏ.ஏ போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையிலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்கள் நூதன போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தொடந்து 20 நாட்களை கடந்தும் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தேசியக் கொடியை நெஞ்சில் குத்திக் கொண்டு, வாயில் கருப்பு துணியால் கட்டிக் கொண்டு, மறைந்த தேசிய தலைவர்கள் அணிவகுக்க பிரமாண்ட பேரணி நடத்தினார்கள்.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இஸ்லாமியர்கள் தங்கள் கணக்குகளை முடித்துக் கொள்கிறோம். எங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொடுங்கள் என்று இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் கணக்கு புத்தகங்களுடன் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர். அதனால் வங்கி அதிகாரிகள் திணறிவிட்டனர்.
பணம் எடுக்க வந்த போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வங்கி அதிகாரிகள், "உங்கள் கோரிக்கையை வங்கி தலைமைக்கு தெரிவிக்கிறோம். அதனால் இன்று பணம் எடுக்க வேண்டாம். நாளை வங்கிகளின் உயர் அதிகாரிகள் வருவதாக கூறியுள்ளனர். அவர்கள் உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வார்கள் அதுவரை காத்திருங்கள்" என்று சமாதானம் செய்தனர். அப்படியும் பலர் சிறிய அளவு தொகைகளை வங்கியிலிருந்து எடுத்து தங்கள் எதிர்ப்பை காட்டிச் சென்றனர். கறம்பக்குடியில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் பரவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.