புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களான கொத்தமங்கலம், வடகாடு, சேந்தன்குடி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்த நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் அந்தந்த கிராம இளைஞர்கள், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிக்காக பலரும் நிதி மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். தூர்வாரப்பட்டுள்ள குளம், ஏரி, வாய்க்கால்களின் கரைகளில் மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இளைஞர்களின் இந்த பணியை பார்த்து பல்வேறு கிராமங்களிலும் நீர்நிலை சீரமைப்புப் பணிகளை இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர். மேலும் பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நீர்நிலை சீரமைக்கப்பட்டுள்ள சேந்தன்குடி, கொத்தமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அந்த நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நட்டதுடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்த அவர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
மேலும் கொத்தமங்கலத்தில் இளைஞர்களால் வாங்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற வசதியாக தண்ணீர் குடங்களை வைத்து தள்ளிச் செல்லும் வண்டிகளை அதற்கான பணியாளர்களிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து இளைஞர்களிடம் பேசும் போது நிலத்தடி நீரை பாதுகாக்க நீர்நிலைகள் மிகவும் அவசியம். அந்தப் பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதும், சொந்த செலவில் சீரமைத்து மரக்கன்றுகள் வளர்ப்பதும் சிறப்பான பணியாக உள்ளது. இந்த கிராமங்களைப் பார்த்து பல கிராமங்களிலும் இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மேலும் உங்கள் பணிகள் தொடர வேண்டும் என்றார்.