விருதுநகரில் நோய்த்தடுப்புத்துறை பணிகள் முன்னேற்றம் மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“காஷ்மீர் பிரச்சனைக்கும் ப.சிதம்பரம் கைதுக்கும் சம்மந்தம் இல்லை கோர்ட் உத்தரவுபடிதான் சிபிஐ அதிகாரிகள் நடந்துகொண்டனர். விஜய்மல்லையாவும் நீரவ்மோடியும் வெளிநாட்டிற்கு தப்பிசென்றுவிட்டனர். ப.சிதம்பரம் இங்குதான் இருந்தார். அதனால், கைது செய்துவிட்டனர். வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் வெள்ளைக்காரனுக்கு இங்கிருந்த சிலர் ஆதரவு தெரிவித்தனர். அதுபோலவே, இந்தியாவில் இருந்துகொண்டே சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து பிரிவினையைத் தூண்டிவிடுகின்றனர். மக்கள் அவர்களை ஏற்க மாட்டர்கள்.
ஜெயலலிதாவைக் கைது செய்தபோது சார்ஜ்சீட் போட்டுத்தான் கைது செய்தார்களா? பழிவாங்கும் வக்கிரபுத்தி ப.சிதம்பரத்திற்குத்தான் உண்டு. கொழுப்பேறிய நாக்கில் திமிராகப் பேசியவர் சிதம்பரம். ஆண்டவன் விடமாட்டான். ஜெயலலிதா தெய்வமாக இருக்கிறார். எங்கள் பிரார்த்தனை வீண்போகாது. ப.சிதம்பரமா ஜெயித்தார்? அந்தத் தொகுதியில் ஜெயித்தது ராஜகண்ணப்பன். அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அது, அவருக்கு எதிராக தற்போது திரும்பிவிட்டது. ப.சிதம்பரம் கைதால் திமுகவினர் சந்தோசமாக இருக்கிறார்கள். கனிமொழி கைதானபோது மட்டும் அமைதியாக இருந்து விட்டு, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டால் மட்டும் மோடியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவதா? ப.சிதம்பரம் பொருளாதார குற்றவாளி. இதை ஜெயலலிதா அன்றே கூறிவிட்டார். ப.சிதம்பரம் பேசுவது அனைத்தும் பொய். அவர் யாரையும் மதிப்பதில்லை. ஜெயலலிதா சிறைக்குச் செல்வதற்குக் காரணமாக இருந்தவர். ஆண்டவன் கெட்டவர்களைச் சும்மாவிடமாட்டான்.
திமுக பாக்தாத் திருடன். யாரிடம் கருத்து கேட்டு கச்சத்தீவை விட்டுக்கொடுத்தார்கள்? கச்சத்தீவைப் போல் தற்போது காஷ்மீரையும் விட்டுக்கொடுக்கச் சொல்கிறார்கள். இவர்களுக்கு அந்நிய சக்திகளிடமிருந்து பணம் வருகிறது. அதிமுகவே சிறிய கூட்டம் நடத்துவதற்கு திணறுகிறது. சிறிய கட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக மாநாடுகள் நடத்துகின்றன. இவர்களுக்கு எப்படி வருகிறது பணம்? இந்தியாவின் நடவடிக்கையைப் பார்த்து உலக நாடுகள் கைகொடுக்கின்றன. அதனால், எதிரி நாடுகள் அச்சப்படுகின்றன. இந்தியா வலுவாகவும், பொலிவாகவும் உள்ளது. கச்சத்தீவை மீட்க எடப்பாடி நடவடிக்கை எடுப்பார்.” என்றார்.
இருப்பவர்களிடமிருந்து திருடி இல்லாதவர்களுக்குக் கொடுப்பவராக பாக்தாத் திருடனில் நடித்தார் எம்.ஜி.ஆர். பாக்தாத் பேரழகியாக நடித்தவர் ஜெயலலிதா. திமுகவுக்கும் பாக்தாத்துக்கும் என்ன சம்பந்தம்? அமைச்சர் ஏன் மாற்றி சொல்கிறார்? வரலாறு முக்கியம் அமைச்சரே.