Skip to main content

புதுக்கோட்டை தி.மு.க மாநகரச் செயலாளர் மரணம்!

Published on 23/12/2024 | Edited on 23/12/2024
Pudukkottai DMK Municipal Secretary passes away!

புதுக்கோட்டை தி.மு.க மாநகரச் செயலாளர் செந்தில் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை ஆடியோஸ் செந்தில்(55) திமுகவில் படிப்படியாக உயர்ந்து திமுக மாநகரச் செயலாளராக வளர்ந்துள்ளார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளராக இருந்ததால் நகராட்சி தேர்தலில் செந்தில் மனைவி திலகவதியை நகர்மன்றத் தலைவராக்கினார். தொடர்ந்து புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த விழாவில் மேயருக்கான செங்கோல் தங்கச் சங்கிலி அணிவித்து மேயர் நாற்காலியில் அமர வைத்தார்.

சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய மாநகரச் செயலாளர் செந்தில், உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்யக்கூடியவர். அந்த வகையில் இன்று காலை உடற்பயிற்சிகள் முடிந்து வீட்டின் முன்புறம் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்துள்ளார். அப்போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது சகோதரி மகளான மருத்துவர்  முதலுதவி சிகிச்சைகள் அளித்துள்ளார். அதன்பிறகு ஆம்புலன்ஸ் மூலம் செந்தில் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதே சமயம் தகவலின் பேரில் மருத்துவமனையில் தயாராக இருந்த மருத்துவக் குழு, செந்திலை பரிசோதனை செய்தனர். அதில், செந்தில் வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அருகே இருந்த உறவினர்களும் திமுகவினரும் கதறி அழுதனர். மாநகர மேயரின் கணவரும் திமுக மாநகரச் செயலாளருமான செந்தில் உயிரிழந்த தகவல் பரவியதும் மாநகர மக்களும், அனைத்துக் கட்சியினரும் அஞ்சலிக்காக கூடியுள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி மாதம் அவரது மகனுக்கு திருமணம் செய்ய அழைப்பிதழ்கள் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளதாக திமுகவினர், உறவினர்கள் கதறுகின்றனர். புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் மறைவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் உள்பட பல இடங்களிலும் நடக்க இருந்த கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்