சத்தீஸ்கர் மாநிலம், கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, நீலு நாகேஷ் மற்றும் நிதின் யாதவ் ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை நிதின் யாதவ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இறந்த பிறகும், சிறுமியின் சடலத்துடன், நெக்ரோபிலியா குணம் கொண்ட நீலு நாகேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் சிறுமியின் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நீலு நாகேஷ் மற்றும் நிதின் யாதவ் ஆகியோர் மீது போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், தனக்கு எதிராக பதியப்பட்ட போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம், நீலு நாகேஷ் போக்சோ வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா மற்றும் பிபு தத்தா குரு ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்கும்போது மட்டுமே இத்தகைய விதிகள் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்ட நீலு நாகேஷ், ஒரு சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்தது, நாம் நினைக்கும் மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஐபிசியின் பிரிவுகள் 363, 376(3), போக்சோ சட்டத்தின் பிரிவு 6, 2012 மற்றும் 1989 சட்டத்தின் பிரிவு 3(2)(வி) ஆகியவற்றின் கீழ் இறந்த உடலுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்காக இதை கருதமுடியாது.
அந்த சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க முடியாது என்பதே உண்மை. மேற்கூறிய பிரிவுகளின் கீழ் ஒரு குற்றத்தை நிரூபிக்க, பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்க வேண்டும். அதனால், சடலத்துடன் உடலுறவு கொள்வதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது’ என்று தெரிவித்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நீலு நாகேஷை விடுவித்தனர். இருப்பினும், கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்ற வழக்கில் நிதின் யாதவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், சாட்சியங்களை அழித்ததற்காகவும், பழைய வழக்குகளுக்காகவும் நீலு நாகேஷுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.