கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. அதனால் மூடப்படும் நாளிலேயே பலர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்று தற்போது கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் சிறிது நேரம் முன்பு ஆயிரக்கணக்கான மதுப்பாட்டில்களுடன் டாடா ஏஸ் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் கீரமங்கலம் அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் அ.தி.மு.க நிர்வாகி துரைக்கண்ணன் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து வடகாடு காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான காவல்துறையினர் வடகாடு சாத்தம்பட்டி குண்டூரணிக் குளக்கரை அருகில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று குளத்தின் அருகில் உள்ள புதர் பகுதியில் ஆய்வு செய்த போது செடிகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 250 மதுப்பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. பாட்டில்களைப் பறிமுதல் செய்ததுடன் அ.தி.மு.க நிர்வாகி துரைக்கண்ணனையும் கைது செய்துள்ளனர்.
இதே போல மாவட்டம் முழுவதும் பலர் ஊரடங்கு நாளையும் கவனத்தில் கொள்ளாமல் அதிக விலைக்கு மது விற்பனை செய்து வருகின்றனர் என்கிறார்கள் பொதுமக்கள். மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தாலும் பாதுகாப்புக்காகப் பூட்டி சீல் வைக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லாத டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களைப் பாதுகாப்பான கடைகளுக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று பொதுமக்களும் டாஸ்மாக் ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.