புதுக்கோட்டை மாவட்டத்தில் மது போதையைவிட மாற்றுப் போதைக்கு இளைஞர்களை ஒரு பெரிய கும்பல் மாற்றி வருகிறது என்பதை அறிந்த போலீசார் மாற்றுப் போதைக்காக மாத்திரை, ஊசிகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து வருகின்றனர். கடந்த மாதம் புதுக்கோட்டையில ஒரு பெண் வலி நிவாரணி மருந்து மாத்திரைகளை இளைஞர்கள், மாணவர்கள் குறிவைத்து போதை ஊசிகளாக விற்று வந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து 15 நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி அருகில் உள்ள அரசர்குளம் பகுதியில் இளைஞர்களிடம் போதைக்காக மாத்திரை விற்க வந்த புதுக்கோட்டை முன்னாள் ஆணழகன் ரியாஸ் கான், ஜெகன் ஆகிய இருவரையும் நாகுடி எஸ்.ஐ நவீன் கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் பலர் அந்த கும்பலில் இருப்பதையறிந்து அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா தலைமையிலான குழுவினர், புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த ஒரு பெண் உள்பட 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 2500 மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டையில் மேலும் பலர் பதுங்கியிருந்து போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ் பி செல்வராஜ் தனிக்குழு அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லையில் மியூசியம் பகுதியை சேர்ந்த 6 பேர் மாத்திரைகள் விற்பதை கையும் களவுமாக பிடித்தனர். இதன் பிறகு மத்திய புலனாய்வு துறையும் இணைந்து களமிறங்கி மாற்றுப் போதைக்கு இளைஞர்களை அடிமையாக்கும் கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தான் இன்று ஒரு காரில் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் படி அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா உத்தரவின் பேரில் அறந்தாங்கி ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர் ராமன், போலிசார் ரமேஷ், பாரதி, முத்துக்குமார்ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டி என் 68 எல் 0020 என்ற ஸ்விப்ட் காரில் ஒரு பெண் உள்பட 3 பேரும் முன்னுக்கு பின் முறணாக பதில் சொன்னதால் காரை சோதணை செய்த போது காரில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே காரில் இருந்த தஞ்சை அம்மன்பேட்டை ராதாகிருஷ்ணன் மனைவி பாண்டியம்மாள் (வயது 40), தஞ்சை மாரியம்மன் கோயில் கொமுட்டி தெரு மாயாண்டி மகன் காசிமாயன் (34), தஞ்சை மாரியம்மன் கோயில் சாலைக்காரத்தெரு கௌரிசங்கர் மகன் சரபோஜி (29) ஆகிய மூவரையும் கைது செய்து, கார் மற்றும் காரில் இருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக இளைஞர்களை சீரழிவுக்கு காரணமாக உள்ள மாற்றுப் போதை பொருட்களை விற்கும் கும்பல் பிடிக்கப்பட்டு வருவது, அதிர்ச்சியளிப்பதுடன், மொத்த கும்பலையும் கைது செய்து புதுக்கோட்டையை மாற்றுப் போதையிலிருந்து மீட்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.