Skip to main content

புதிய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குறித்து அறிவித்த முதல்வர்!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

CM Edappadi palanisami announced new medical college and hospital in ramanathapuram
கோப்பு படம்

 

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்காக இராமநாதபுரம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலத்திட்டப்பணிகளை வழங்கி, திட்டப்பணிகளுக்காக அடிக்கல்லும் நாட்டினார். அப்போது அவர், விரைவில் இராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

முன்னரே திட்டமிட்டப்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்ட நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ரூ.70,54,88,000 மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், ரூ.24,24,68,000 மதிப்பில் முடிவுற்ற 844 திட்ட பணிகளை திறந்து வைத்தார். தொடர்ச்சியாக பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் கடந்த ஜூன் மாதத்தில் இந்திய, சீன லடாக் எல்லையில் இரு நாட்டு வீரர்கள் இடையே நடந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனி மனைவி வானதி தேவிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி ஆணை வழங்கினார்.

 

அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் " குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது." என்றவர் தொடர்ந்து, "இராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை  மருத்துவக்கல்லூரி" அமையவுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் மாவட்ட மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்