வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல்நிலைய ஆய்வார் பாலசுப்பிரமணி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் அந்த காவல்நிலைய ஆய்வாளர் பொறுப்பை வேலூர் தெற்கு காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் லட்சுமி கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்தார்.
வேப்பங்குப்பம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க அத்தியாவசியப் பணி தவிர மற்ற பணிகளுக்கு வரும் வாகனங்களைச் சோதனையின் அடிப்படையில் பிடிக்கின்றனர். அப்படிச் சோதனை நடத்தும் போது சாராயம் காய்ச்ச வெல்லம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அப்படிக் கொண்டு செல்லப்பட்ட ஒரு வாகனத்தைக் காவலர்கள் பிடித்து வழக்குப் பதிவு செய்து காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். வாகனத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதிலிருந்த வெல்லத்தைச் சாராயக் கும்பலுக்கு விற்றதாக இன்ஸ்பெக்டர் லட்சுமி மீது, உயர் அதிகாரிகளுக்குப் புகார் சென்றுள்ளது.
அதேபோல் காவல்நிலையத்துக்குப் புகார் தர வரும் பொதுமக்களிடம் 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், அப்படித் தந்தால் தான் புகாரை வாங்குவேன் எனச் சொன்னதாகவும் புகார்கள் சென்றுள்ளன. இந்தப் புகார்களின் மீது முதல் கட்டமாக துறையில் விசாரணை நடத்தியுள்ளார் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி. விசாரணையில் ஆய்வாளர் லட்சுமி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை மே 24ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கினார்கள் என ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் எனச் சிலரை இடமாற்றம் செய்தார் டி.ஐ.ஜி. தற்போது ஒரு பெண் இன்ஸ்பெக்டரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.