
கடந்த 50 நாட்களாக நடக்காமல் இருந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள ஒரு கிராமம். முழுமையாக விவசாயக் கூலித் தொழிலாளிகள் நிறைந்த கிராமம். குடிதண்ணீருக்காக அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலையில் ஊற்று தோண்டி தான் தண்ணீர் எடுத்துச் சென்று குடிக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று (18/05/2020) காலை அதே கிராமத்தைச் சோ்ந்த அந்தப் பகுதியில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனியாக குடிதண்ணீர் எடுக்கச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பிவரவில்லை என்று பெற்றோர் தேடிச் சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு தைல மரக்காட்டில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே சம்பவம் குறித்த தகவல் அறிந்து சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், நான்கு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.