அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுவையில் உலா வருவதாகவும், புதுவை மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுவையைச் சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து, அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு 28- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரின் குற்றப்பின்னணி அரசியல் ஆவணங்களை எல்லாம் படித்துப் பார்த்த நீதிபதிகள், புதுச்சேரி மாநில போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 2009- ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் எல்லாம் முதல் தகவல் அறிக்கை நிலையிலேயை உள்ளன. அந்த வழக்குகளின் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கவில்லை.
11 ஆண்டுகளாக போலீசார் என்ன செய்கிறார்கள்? அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் உலா வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான். இந்த குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்கவேண்டும். இந்த வழக்கில் 11 ஆண்டுகளாக ஏன் புலன் விசாரணையை முடிக்காமல் போலீசார் இழுத்தடித்து வருகின்றனர்? என்பது குறித்து விளக்கம் அளிக்க, புதுச்சேரி டி.ஜி.பி. நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட நேரிடும். எனவே, விரிவான பதில் மனுவை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சென்னை மாநகராட்சி எல்லையை விட குறைந்த எல்லை கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் உடனுக்குடன் அரசு நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.