புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமாரும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் மற்றும் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரை பிரிக்கப்பட்டு முதலில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.
காமராஜ் நகர் தொகுதியை பொருத்தவரை 11 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 35,009 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17,047 பேர் ஆண்கள். 17, 961 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினம். வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக 21 இடங்களில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்துள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, நிழற்பந்தல், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வி.வி.பாட் எந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடிகள் அனைத்தும் வலைதளம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது துணை ராணுவ படையினர் மற்றும் புதுச்சேரி போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
தேர்தலையொட்டி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க புதுவை மாநிலத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 24-ஆம் தேதி அன்றும் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்குள்ள பாதுகாப்பு அறையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. பின்னர் வருகிற 24-ஆம் தேதி அங்கிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது
இதனிடையே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 27,000 ரூபாய் மற்றும் பணத்தை வைத்திருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் பவுன்பேட்டை வேலு என்பவர் கைது செய்யப்பட்டார். அதேசமயம் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் தீபாவளி பரிசு என்ற பெயரில் வாக்காளர்களுக்கு 5,000 ரூபாய்க்கான டோக்கன் வழங்குவதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டணி கட்சியினர் கருவடிக்குப்பம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் சமரசம் செய்து கலைத்தனர்.
பின்னர் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் சாய்பாபா படம் பொறித்த டோக்கன் வாக்காளர்களுக்கு வழங்கியதை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது.