‘என்னால முடியல..’ – பெண் கவுன்சிலரின் தற்கொலை முயற்சி! என்னும் தலைப்பில், விருதுநகர் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆஷா, விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் குறித்து நேற்று (6-ஆம் தேதி) செய்தி வெளியிட்டிருந்தோம்.
பொதுவெளியில் தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியதால் ஏற்பட்ட விரக்தியில், தரையைச் சுத்தம் செய்யும் லைசால் திரவத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ஆஷா, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருடைய சித்தி சத்யா தேவி, ஆஷாவைத் தொடர்புகொண்டு, “ஆஷா.. இந்தமாதிரி சோதனையெல்லாம் நிறைய வரும். இதை எல்லாத்தையுமே கடந்துதான் போகணும். தேர்தல்ல போட்டியிட சீட் கிடைக்காதவங்க, போட்டியிட்டு தோற்றவங்க, எல்லாருமே தூண்டிவிட்டு எல்லாமே பேசத்தான் செய்வாங்க. இந்த குள்ளநரி வேலையெல்லாம் ரொம்பப் பண்ணுவாங்க. இதுக்கெல்லாம் பயப்படாத. தைரியமா இரு. கடவுள் உன் பக்கம் இருக்காரு. நியாயமா நடந்துக்கோ. நேர்மையா இருந்துக்கோ. என்னைக்குமே நியாயமும் நேர்மையும் மட்டும்தான் ஜெயிக்கும். சரியா? கவலைப்படாத, தைரியமா இரு. யாரு, யாரை வேணுன்னாலும் தூண்டிவிட்டு என்ன வேணும்னாலும் பண்ணட்டும். கடவுள்ன்னு ஒருத்தன் இருக்கான்; அவன் பார்த்துக்குவான். மனச தளரவிட்றாத. லூசு மாதிரி ஏதாச்சும் பண்ணிட்டு இருக்காத, சரியா? எல்லாத்தையும் எதிர்கொண்டுதான் போகணும்” என மகள் ஆஷா-வைத் தேற்றியுள்ளார்.
நம்மிடம் சத்யா தேவி “பிறந்ததும் என் கையிலதான் ஆஷாவைக் கொடுத்தாங்க. அவளுக்குப் பொறந்த புள்ளையவும் நான்தான் கையில வாங்கினேன். நாங்க ஆசை ஆசையா வளர்த்த மகளுக்கு இப்படியொரு பிரச்சனைன்னா, என் மனசு என்ன பாடுபடும்? பத்து வருஷம் பிள்ளையில்லாம பெத்தவ மனசு என்ன கொதிகொதிக்கும்? குடிச்சது லைசால்ங்கிறதால பிழைச்சிக்கிட்டா. ஆசிட் எதையும் குடிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்? பிரச்சனை பண்ணுறவங்க நிறையபேர் இருக்காங்க. என்னையவும் திட்டிருக்காங்க. நான் வெளிய சொல்லுறதில்ல. அரசியல்ல இருக்கிறதுனால, நிறைய செலவாயிருச்சு; கடனாயிருச்சு. அது ஒரு மேட்டரே கிடையாது. ஆம்பள ஒருத்தன், பொம்பள மாதிரி பேசிட்டு திரிஞ்சான்னா என்ன அர்த்தம்? அவன் என்னடான்னா, இன்னொரு ஆள்கிட்ட என் நம்பர கொடுத்து, ராத்திரி 11 மணிக்கு மேல எனக்கு போன் பண்ண வைக்கிறான். எல்லாத்தையும் போலீஸ்கிட்ட சொல்லுவேன். பிரச்சனை நிறைய இருக்கு. சும்மா விடமாட்டோம். ஆதாரத்த எல்லாம் சேர்த்து வச்சிக்கிட்டு, மொத்தமா காட்டுவோம் வேடிக்கைய. இப்படியொரு மனநிலைலதான் இருக்கேன். நான் போல்டானவ. கெட்ட விஷயத்துக்கு துணைபோக மாட்டேன். கெட்டவங்க எனக்கு குடைச்சல் கொடுத்தாங்கன்னா, மொத்தமா ஒருநாள் பார்த்துக்குவேன். எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. கண்டிப்பா எனக்கு நியாயம் கிடைக்கும்.” என்று குமுறலாகச் சொன்னார்.
ஆஷா-வின் அம்மா பூமாரி நமது லைனுக்கு வராத நிலையில், ‘என்னதான் பிரச்சனை?’ என்று அந்த ஏரியாவில் விசாரித்தோம். “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரா வெற்றிபெற, ஆஷா நிறைய பணம் செலவழிச்சாங்க. ஆஷா அம்மாகிட்ட இருந்த சீட்டு பிடிக்கிற பணமும் அந்த நேரத்துல செலவாயிருச்சு. இதனாலதான், சீட்டு போட்டவங்க நெருக்கடி கொடுத்தாங்க. கண்டமேனிக்கு திட்டவும் செஞ்சாங்க.” என்றனர்.
“ஏற்கனவே கடன் பிரச்சனைல இருக்காங்க. இதுல தற்கொலை முயற்சி வழக்கு வேறு போட்டு மேலும் சங்கடப்படுத்த வேண்டாம்.” என்று உள்ளூர் பிரமுகர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 294 (b) என்ற ஒரு பிரிவின் கீழ் மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளது, விருதுநகர் மேற்கு காவல்நிலையம். அரசியல் பொதுவாழ்க்கையில் இறங்கும் பெண்கள் பலரும் கடும் சோதனைகளைச் சந்தித்தே வருகின்றனர்.