புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவரிடம், "புதுச்சேரியில் தி.மு.க தலைமையில் திராவிட மாடல் ஆட்சி வரும்" என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே எனக் கேட்டதற்கு, " புதுச்சேரிக்குத் திராவிட மாடல் தேவையில்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழகத்திடமிருந்து 300 ஏக்கர் நிலம் கேட்டோம். மக்கள் மீது நல்லெண்ணம் இருந்தால் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கட்டும். தமிழக - புதுச்சேரி மக்கள் பயனளிக்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றட்டும்" என்றார்.
புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு உள்ளது. பொம்மை முதல்வராக ரங்கசாமி உள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளாரே. என்ற கேள்விக்கு, "ஆளாளுக்கு தலையீடு இருக்கு தமிழகத்தில். புதுச்சேரியில் ஆளுநர் தலையீடு நல்லதுதான். புதுச்சேரியில் பொம்மை ஆட்சி இல்லை; பொம்மை ஆட்சி கர்நாடகாவில்தான் உள்ளது. ஸ்டாலின் தவறாகச் சொல்லிவிட்டார்" எனக் கூறினார்.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதுதான் புது மாடல். நாங்கள் 25 ஆண்டுகள் அரசியல் பணி செய்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். தற்போது வாரிசு அரசியல் நடக்கின்றது" என்றார்.