Published on 12/10/2019 | Edited on 12/10/2019
புதுச்சேரி கரையாம்புத்தூர் ஏரிக்கரை ஓரத்தில் குணசுந்தரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தீபாவாளி பண்டிகையையொட்டி பல்வேறு பட்டாசுகள், வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் திடீரென பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு தொழிற்சாலை வெடித்து சிதறியது. பயங்கர வெடி சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஞானாம்பாள், தீபா ஆகிய இருவரும் தீ விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 4-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயமடைந்து அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு குடோன் உரிமை பெறப்பட்டுள்ளதா வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.