கடந்த ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (22.01.2024) வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 294 பேரும் ஆவர். இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13 லட்சத்து 88 ஆயிரத்து 121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13 ல்டசத்து 61 ஆயிரத்து 888 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் ஆண்கள் 6 லட்சத்து 17 ஆயிரத்து 623 பேரும், பெண்கள் 7 லட்சத்து 43 ஆயிரத்து 803 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 462 பேரும் ஆவர்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது, பெயர் சேர்த்தலுக்காக பெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18 வயது முதல் 19 வயதுள்ள 5 லட்சத்து 26 ஆயிரத்து 205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.