மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் தரவரிசை கட்டமைப்பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (பெங்களூரு) தேர்வு செய்யப்பட்டு தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2 ஆம் இடமும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவிலுள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே போன்று கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் தரவரிசைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி 2ஆம் இடமும், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி 3ஆம் இடமும் பெற்றுள்ளன. அந்த வகையில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இதே பிரிவில் சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி 3வது இடத்தை பிடித்துள்ளது. அதோடு சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.