நாகை அருகே பிரதாபராமபுரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் குறித்து கிராமமே திரண்டு மாவட்ட எஸ்.பி ஜவஹரிடம் மனு அளித்துவிட்டு திரும்புவதற்குள் மீண்டுமொரு திருட்டு சம்பவம் அரங்கேறியதால் கிராம மக்களையும், போலீசாரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பிரதாபராமபுரம், பூவைத்தேடி, ராமர்மடம் செருதூர், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹரிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட நாகை மாவட்ட எஸ்.பி, நேரடியாக பிரதாபராமபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு மக்களை நேரடியாக சந்தித்தார். அதோடு இன்றிரவு முதல் கூடுதலாக தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றலாம் என்று தெரிவித்தார். இது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த ஆறுதல் சிறிது நேரம்கூட நீடிக்கவில்லை. மாவட்ட எஸ்.பி, மக்களை சந்தித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் பூவைத்தேடி பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் திருட்டுப் போனது. போலீசார் இருக்கும்போதே திருட்டு நடக்கிறதே, என பொதுமக்கள் ஆவேசம் கலந்த அச்சமடைந்தனர்.
இந்தநிலையில், காவல்துறையை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த எஸ்.பி ஆய்வு மேற்கொண்டார். மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் துப்பு துலக்கப்பட்டது.
எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்த பொதுமக்கள், "சாராயத்தையும் கஞ்சாவையும் ஒழித்தாலே நிச்சயம் திருட்டும், வழிபறியும் குறைந்துவிடும்" என்றனர்.
குற்றவாளிகள் யார் என காவல் நிலையம் சென்று புகார் அளித்தால், கழுத்தை அறுத்தாலும் பார்த்துக் கொள்ளலாம் எனப் போலீசார் தெரிவித்தது பொதுமக்களை ஆத்திரமடையச் செய்தது. “பாதுகாப்பு தரவேண்டிய போலீசாரே இவ்வாறு தெரிவிப்பது வேதனை அளிக்கிறது” என்கின்றனர்.