சேலத்தில் குடிபோதையில் பணிக்கு வந்த ஆசிரியரை பொதுமக்கள் வகுப்பறையில் சிறைவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், மது போதையில் பணிக்கு வருவதாகவும் கழிப்பறைக்குச் செல்லும் மாணவிகளைப் பின்தொடர்ந்து செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை (டிச. 23) காலை அந்தப் பள்ளியை திடீரென்று முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்த வந்த மற்ற ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புகாரில் சிக்கிய ஆசிரியரை பொதுமக்கள் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே அடைத்து வைத்து சிறைபிடித்தனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர், தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் நிகழ்விடம் விரைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் முறையிட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். அதையடுத்து வகுப்பறைக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியரை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.