Skip to main content

மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி; பொதுமக்கள் போராட்டம்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Public struggle against attempt to occupy cemetery

 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது பெரியபுலியூர் கிராமம். இந்த கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள மயானத்தை 200 வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் தனி நபர் ஒருவர் அந்த மயானத்தை ஆக்கிரமித்து மயானத்தில் ரோடுகள் அமைக்கும் வகையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதேபோல் அங்கு சாக்கடை தோண்டும் பணியும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரிய புலியூர் கிராம மக்கள் 20க்கும் மேற்பட்டோர் திமுக 3வது வார்டு செயலாளர் பி.டி. ரமேஷ் தலைமையில் திரண்டு வந்து மயானத்தில் நடைபெற்ற பணிகளைத் தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இது குறித்து ஆட்சியருக்கு பெரிய புலியூர் கிராமம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு விரைந்து வந்தனர். இதுபோல் கவுந்தப்பாடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மயானத்தில் நடைபெற்ற பணிகளைத் தடுத்து நிறுத்தினர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்