திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே செந்துறையில் துப்பாக்கியால் தாக்கி மிரட்டியதாக எஸ்.ஐ.யை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் குதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதியில் இருக்கும் செந்துறை பகுதியில் குரும்பபட்டி ரோடு அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு நத்தம் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. மாதவராஜா இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியில் வந்த அழகு, பாண்டி, முருகன் உள்ளிட்ட 7 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமரன் உள்ளிட்ட சிலர் நின்று கொண்டிருக்கும் வாகனங்கள் மீதும் ஏன் வழக்கு பதிவு செய்கிறீர்கள் என்று கேட்டதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின் வழக்குப்பதிவு செய்த இரு சக்கர வாகனங்களை மட்டும் போலீஸார் நத்தம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருடன் செந்துறையில் உள்ள செல்வக்குமரன் வீட்டுக்கு சென்ற எஸ்ஐ மாதவராஜா அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துள்ளார்.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமரன், "எதற்காக இந்த நேரத்தில் அழைக்கிறீர்கள். விடிந்ததும் நாங்களே வருகிறோம் என அவரது தந்தை ராஜேந்திரன் கூறியுள்ளார்". இதில் கோபமடைந்த மாதவ ராஜா தனது கைத் துப்பாக்கியை செல்வகுமரன் தலையில் தாக்கி மிரட்டியதாகவும் அதன்பின் செல்வகுமரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றதாகவும் தெரிகிறது. இதை எதிர்த்து செந்துறையில் திரண்ட பொதுமக்கள் எஸ்.ஐ.மாதவ ராஜாவை கண்டித்து பஸ் மறியலில் குதித்தனர்.
இந்த விஷயம் டிஎஸ்பி வினோத்துக்கு தெரியவே உடனே போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பஸ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது டிஎஸ்பி வினோத் பொதுமக்களிடம் பேசும்போது, இச்சம்பவம் குறித்து விசாரித்து அந்த எஸ்.ஐ. மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்களும் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.