திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வனஜா, மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். நேற்று (03.12.2021) தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு காரில் சென்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி 6ஆம் நம்பர் வாய்க்கால் அருகே வரும்போது எதிரே, ஒரு இளைஞர் வந்த மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதி கீழே சாய்கிறார்.
தலையில் பலத்த காயம். கண் முன்னே ரத்தம் கொட்டிய நிலையில் இளைஞன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்து பதறிக்கொண்டு காரிலிருந்து செவிலியர் வனஜா இறங்கினார். ‘எல்லாரும் ஓரமா போங்க’ என்று சொல்லிக்கொண்டே தார்ச்சாலையில் கிடந்த அந்த இளைஞரின் கைகளைப் பிடித்துப் பார்க்கிறார், நெஞ்சில் கை வைத்துப் பார்க்கிறார். அதில் இதயத் துடிப்பு நின்றுவிட்டிருப்பது தெரியவந்தது. உடனே சி.பி.ஆர் என சொல்லப்படும் இதயத்துடிப்பை மீண்டும் இயக்கச் செய்யும் முதலுதவி சிகிச்சையை அவருக்கு அளித்தார். தனது இரு கைகளாலும் இளைஞனின் நெஞ்சில் வைத்து பலமுறை அழுத்தம் கொடுக்கிறார்.
சில நிமிடங்களாக நின்றிருந்த இளைஞனின் இதயத் துடிப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதைப் பார்த்து முகம் மலர்ந்த வனஜா, “இனி ஆபத்தில்லை, ரத்தம் அதிகமாக வெளியேறுகிறது. உடனே மருத்துவமனை கொண்டு போகணும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே 108 ஆம்புலன்ஸ் வந்துவிட, அதில் ஏற்றிவிட்ட பிறகு கருணையோடு நின்ற இதயத்திற்கு உயிர்கொடுத்த செவிலியர் வனஜா தனது காரில் ஏறி வீட்டிற்குச் செல்கிறார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமின்றி இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தக்க சமயத்தில் நின்ற இதயத்திற்கு உயிர்கொடுத்து இளைஞனைக் காப்பாற்றிய சகோதரி செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர். ‘என் கடமையை செய்தேன். இதற்கு எதற்கு பாராட்டுகளும், நன்றிகளும்’ என்று அடக்கமாக சொல்லிக்கொண்டிருக்கிறார் வனஜா. விபத்தில் இதயத் துடிப்பு நின்று கிடந்த இளைஞர், மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வசந்த் என்பதும் பட்டுக்கோட்டை கார்க்காவயல் மனோரா பாலிடெக்னிக்கின் 3ஆம் ஆண்டு மாணவன் என்பதும் தெரியவந்தது.
மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் வசந்த். விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, அவரது உயிரைக் காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அதேபோல், மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் செவிலியர் வனஜாவின் செயலைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்து கிடப்பவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினால் பரிசு வழங்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.